Freitag, 24. Mai 2013

ட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்!

MM001.jpg

விடிகாலையில், காகங்களின் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சேனாதி, கிணத்தடிக்குப் போய் முகத்தை அலம்பிவிட்டு, வீட்டுவாசலில் தொங்கிய திருநீற்று முட்டிக்குள் கையைவிட்டு எடுத்த திருநீற்றை முகத்தில் பூசியபடி, அப்பனே முருகா என்று உரத்தே சத்தம்போட்டார். அவர் கூப்பிடுவதும், முருகனிடமிருந்து பதில் வராததும் வழமையே எனினும், அவர் முருகனை அழைக்கும் உரத்த குரல், அவரது மனைவியாகிய சரசு என அழைக்கப்படும் சரஸ்வதியை நிச்சயம் நித்திரையிலிருந்து எழுப்பி விடும். அடுப்படிக்குப் போய், நேற்றே,அரைவாசியாய் எரிந்து முடிந்திருந்த ஒரு கங்குமட்டையிலிருந்து ஒரு துண்டுக்கரியை எடுத்துப் பல்லைவிளக்கிக்கொண்டு , பிள்ளையள் எழும்புங்கோவன் விடிஞ்சிட்டுது எண்ட படி, கேத்திலைத் தூக்கி அடுப்பில் வைத்துவிட்டுக் கிணத்தடியை நோக்கிப்
 போனாள்!


சேனாதியும், தனது முத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது மொரிஸ் மைனர் காரை நோக்கிச் சென்றார். அது அவருக்கு ஒரு குழந்தை மாதிரித் தான். அது தான் அவரது வருமானத்தின் பெரும்பகுதியை அவருக்கு ஈட்டித் தந்தது. மெல்ல அதை அன்போடு தடவிக்கொடுத்தவர், பக்கத்தில் நின்ற, தூக்குச் செம்பரத்தை மரத்திலிருந்து, மூன்று பூக்களைப் பிடுங்கி, அந்தக் காருக்குள் இருந்த முருகன், லட்சுமி, பிள்ளையார் ஆகியோருக்கு ஒவ்வொரு பூவாக வைத்தார். அதன் பின்னர், சிறிது திருநீறை எடுத்து, வண்டியைச் செலுத்தும் சக்கரத்தின் நடுவில் உள்ள வட்டத்தில், முருகா என்ற படி பூசினார்.

அதனைப் பார்த்துக்கொண்டிருந்த சரசுவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. ஒவ்வொரு நாளும், தனது கணவனின் இந்தச் செயலை, அவள் பார்த்துக் கொண்டிருக்கின்றாள், எவ்வளவு, மகிழ்ச்சியான காலங்கள் அவை என, அவளது மனது தனக்குள் நினைத்துக் கொண்டது. சேனாதி, ஓடிய அந்தக்கார், ஒருநாள் கூட, வேறொரு காருடனோ, வேறு எதனுடனுமோ மோதியது கிடையாது. தனது, இன்னொரு குழந்தையைப் போலத் தான், சேனாதி அந்தக் காரைப் பராமரித்தார். சேனாதிக்கும், மற்றவர்கள் தன்னை, ட்றைவர் சேனாதி என்று அழைக்கும்போது, புறக்டர் சேனாதி என்று அழைப்பது போல மிகவும் பெருமையாகவும் இருக்கும்!

அவளது நினைவுகள், கடந்த காலத்துச் சேனாதியை ஒரு கணம் நினைத்துப்பார்க்க, சரசுவின் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

சேனாதி, காரின் முன்பக்கத்தைத் திறந்து, எண்ணை, தண்ணி எல்லாம் ஒழுங்காக இருக்கின்றதா என்று சரி பார்த்த பின்னர், கார் முழுவதையும், ஈரத் துணியால் ஒருமுறை துடைக்க, அதுவும் பளபளவென்று, காலைச்சூரியனின் ஒளியில் மினு மினுத்தது.  பின்னர், காருக்குள் கிடந்த முதல் நாள் வீரகேசரிப் பேப்பரை எடுத்துக்கொண்டு சாய்மனைக்கதிரைக்கு வரவும், சரசுவும் முட்டைக் கோப்பியோடு வரவும் சரியாக இருக்கும்.  சுவரில் மாட்டப்படிருந்த ‘பெக்' கில் தொங்கிய சேட்டை எடுத்தவர், அதற்குள்ளிருந்த ‘சுவீப்' டிக்கட்டைக் கவனமாக எடுத்து, வீரகேசரிப் பேப்பரில் உள்ள, சுவீப் முடிவுகளுடன், ஒப்பிட்டுப் பார்த்த பின், ‘அட, மூண்டு நம்பரால இந்த முறை சறுக்கிப் போட்டுது' என்று கோப்பியுடன் நின்ற சரசுவைப் பாத்துச் சப்புக் கொட்டினார். அவர் ‘சுவீப்' டிக்கட் வாங்குவதற்கு மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், அவரது மூன்று பொம்பிளைப் பிள்ளைகள். அடுத்தது, அந்தச் சுவீப் டிக்கட்டின் முதலாவது பரிசு, ஒரு பென்ஸ் கார் என்பது. கடைசிக்காரணம், இவர் யாழ்ப்பாணச் சந்தையடியில் இருந்து காரை எடுக்கும் போது, இவரைக் காணும் சுவீப் டிக்கட் விற்பவன், போனாக் கிடையாது, பொழுது பட்டாக்கிட்டாது, என்று உரத்த குரலில் சத்தம் போடத் தொடங்குவதும் தான்!

சரி, இண்டைக்கு திங்கட்கிழமை எண்டது மறந்து போச்சுது என்று கூறியவர், கிழமை தெரியிறதுக்கு நான் என்ன கவுன்மேந்து வேலையா பாக்கிறன் என்று தனக்குத் தானே பதிலும் கூறிக்கொண்டார். இப்ப வெளிக்கிட்டாத்தான் 776 வாறதுக்குக் கொஞ்சம் முந்திப்போனால், போடிங்குக்குப் போற பெடியளைப் பிடிக்கலாம். இந்தப் பெடியளை ஏத்திக்கொண்டு போறதால அவருக்குக் கொஞ்சம் ‘லாபம்' அதிகமாக இருக்கும். பெரிய ஆக்களின்ர மடியளில, பெடியளை இருக்கவிடலாம் என்பதால், அதிக இடத்தை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. எனவே வருகின்ற முழுக்காசும் எக்ஸ்ட்ரா வருமானம் தான். வழியில, பொன்னர், போயிலைக்கட்டுக்களோட நிண்டதையும், காரை மறித்ததையும் கண்டார். உடனை அவருக்கு, அண்ணை, பின்னால பஸ் வருகுது என்று கூறியபடியே, விடிகாலைப் பயணிகளை ஏத்திக்கொண்டு போக இறுப்பிட்டியிலிருந்து வெளிக்கிட்டார். பொதுவாக, மீன், போயிலை போன்றவற்றை ஏத்துவது சேனாதிக்கு விருப்பமில்லை. சாமிப்படங்கள் இருக்கிறதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனாலும், சேனாதியிடம் சில தொழில் தர்மங்களும் இருந்ததை மறுக்க முடியாது. பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களை, எந்த நேரத்திலும், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதற்குச் சேனாதி ஒரு நாளும் காசு வாங்குவதில்லை. போகும் வழியில்,  வாற ஒவ்வொரு கோவிலடியிலும் , கண்ணைமூடி, நெத்தியையும் நெஞ்சையும் ஒருக்காத் தொட்டுக் கொள்ளவும் சேனாதி மறப்பதில்லை.

சேனாதியர் கார் ஓட்டுற விதமே அருமை. பாக்க வலு சந்தோசமாயிருக்கும். அந்தக் கோழி முட்டை மாதிரியிருக்கிற கியரின்ர நுனியைத் தொட்டுப்பாக்கச் சில வேளைகளில் ஆசை வருவதுண்டு. தம்பியென்ன, கடலுக்குள்ள எங்களைக் கவிழ்க்கிற பிளானோ, எண்ட அவரது கடுமையான தொனி, அந்த ஆசையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும். அதே போலத்தான், அவர் காரின்ர சிக்னலைப் போடும்போதும், காரின்ர கதவுக்குப் பக்கமாய், ‘பொப்' என்ற சத்தத்துடன், ஒரு சின்னத் தடி மாதிரி ஒண்டு, மேல உயர்ந்து பின்னர் கீழே போகும். அது வரப்போகும் நேரம் பார்த்துத் திடீரென அதை அமத்தும்  போது மட்டும் சேனாதிக்குப் பொல்லாத கோபம் வரும். எங்கட ரோட்டிலை, பஸ் ஓடினாலும், சேனாதியின்ர காருக்கு ஒரு தனி மவுசு இருந்தது. ஒண்டு, காரில, கெதியாப் போயிரலாம். மற்றது, காரில எப்பவும் நல்ல ‘லோட்' இருக்கிறபடியால, இந்தத் துள்ளலுகள் கொஞ்சம் குறைவா இருக்கும். அதோட கொஞ்சம் ஊர்ப் புதினங்களும், பயணிகளால், பகிரப்படுவதுண்டு. அப்போதெல்லாம், அவர், இவருடன் ஓடிப்போனார் என்ற கதைகள் அவ்வளவு விளங்காத காலம்.
‘தம்பி மார், பண்ணைப்பாலம் வருகுது. மணியண்ணையின்ர காரிலை, கையைக்காட்டிப்போட்டுப் போறார். போலீஸ்காரன் நிக்கிறான் போல கிடக்கு. எல்லாரும் ஒருக்காக் குனியுங்கோப்பு, என்று கூறினார். போலீஸ்காரனும், வெளியவந்து பாக்கிறதில்லை. தனது மேசையிலிருந்த படியே, கார்க் கண்ணாடிக்குள்ளால பாத்து ஆக்களை எண்ணுறதோட சரியென்ட படியால, சேனாதியும் ஒவ்வொரும் முறையும் தப்பிக் கொள்வார்.

யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பி வாற நேரம், அனேகமாக, கடைக்காரர் தங்கட கடைக்குச் சந்தையில சாமான் வாங்கி ஏத்துவினம். வாழைக்குலைகள், மரக்கறிகள்,உடுப்பு வகைகள் எண்டு நிறையச் சாமான் ஊருக்குப் போகும். அதோட, ஏதாவது கோவில் திருவிழா, கலியாணவீடு, செத்தவீடு எண்டால், சேனாதியின் காருக்கு நிரம்ப வேலையிருக்கும். பத்துமணிக்குப் பிறகு, பட பஸ், போனப்பிறகு, சனம் எவ்வளவு காசெண்டாலும் குடுத்து, ஊருக்குப் போக ஆயத்தமாக இருக்கும். அதோட, கொழும்புப் பயணகாரர் வாறபோதும், அவர்கள் சேனாதியை விரும்பி அழைப்பதுண்டு. கிழமையில, ஏழுநாளும் சேனாதிக்கு வேலையிருக்கும்.

ஒரு நாள் இரவு, ஒரு ஆறு  பெடியளவில, சேனாதியிட்ட வந்து, அண்ணை, உங்கட கார், எங்களுக்கு அவசரமாத் தேவைப்படுகுது, அலுவல் முடியத் திருப்பித் தந்திடுவம்  எண்டு கேட்டனர்.. அவர்கள் எல்லோருடைய கைகளிலும்,  துப்பாக்கிகள் இருந்தன. சேனாதிக்குப் பொதுவா, ஊரில எல்லாரையும் தெரியும். ஆனால், வந்த பெடியளைச் சேனாதி ஒரு நாளும் கண்டதுமில்லை. இல்லைத் தம்பிமார், எனக்குக் கார் தான் பிழைப்புக்கு வழி காட்டிறது, இதில்லா விட்டால், வீட்டில எல்லாரும் சிவபட்டினி கிடக்க வேண்டியது தான் என்று கூறவும்,.வந்தவர்கள், சேனாதியின் விளக்கத்தைக் கேட்பவர்களாக இல்லை.
அண்ணை, திறப்பைத் தாறீங்களோ அல்லது, வேற விதமா நாங்கள் ‘ஸ்டார்ட்' பண்ணுறதோ? எனக் கேட்கச், சரசுவும் பிள்ளையளும் அழத்தொடங்கி விட்டினம். சேனாதியும், மிகவும் தயக்கத்துடன் காரின் திறப்பைக் கொடுக்கவும், அவர்கள் காரை எடுத்துக் கொண்டு எல்லோரும் அதில் ஏறிக்கொண்டு போனதைப் பார்த்துக்கொண்டு, வாயடைத்துப் போன சேனாதி, அவர்கள் போன பின்பு தான் , தம்பியள், கார் கவனமப்பு என்ற வார்த்தைகளைத் துப்பினார்.

அதன் பின்பு, ஒரு மாதத்தின் பின்பு, அவரது கார் கோயிலடியில் நிற்பதாக, ஆரோ சொல்லக்கேட்டுப் போய்ப் பார்த்தார். அவரது காரை, அவராலேயே அடையாளம் காண முடியவில்லை. அதன் சில்லுகளும், காத்துத் திறக்கப்பட்டு, வெறுமையாகக் கிடந்தன. அந்தக்காரின் நிலையைப் பார்த்ததும், சேனாதியின் மனம் முற்றாக உடைத்து போய் விட்டது. அதை, ஒரு மாதிரிக்கட்டியிழுத்து, வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். அதன் ‘என்ஜின்' செத்துப்போயிருந்தது. அவரது மனமும் தான்.

இப்போது, கார் ஓடாமல் விட்டு ஐந்து வருடங்கள்  உருண்டோடி விட்டன
ஆனாலும், காலையில் எழுந்து, அதற்குப் பூவும், பொட்டும் வைப்பதை, அவர் இன்னும் நிறுத்தவேயில்லை.. ஒரு வேளை, அந்தக் காரின் ‘ஆன்மா' அவருக்குத் தெரிகின்றதோ, என்னவோ!

http://www.punkayooran.com/

0 Kommentare:

Kommentar veröffentlichen