Montag, 13. Mai 2013

வளர்ந்த பிள்ளையும் பெற்றோரும்...

வளர்ந்த பிள்ளையும் பெற்றோரும்...
 http://kovaikkavi.files.wordpress.com/2011/02/ffa1.jpg
 
 
காட்சி 1
 
ஒரு நாள் இரவு மனைவி காதுக்குள் கதைக்கத்தொடங்கினாள்.

(முன்பெல்லாம் இந்த தலையணி மந்திரத்துக்கு காது கொடுப்பதில்லை. அனுபவத்தால் அவளது சில தகவல்களைக்கேட்காது விட்டு வாழ்வில் சில விடயங்களில் வாங்கிக்கட்டியதாலும் மக்களது நலன் சார்ந்தும் தற்பொழுது காது திறந்து விடப்பட்டுள்ளது)

மனைவி : அப்பா  இவன் பெரியவன் அடிக்கடி வெளியில் போகின்றான். இரவு நேரம் சென்றுதான் வீட்டுக்கு வருகின்றான். எனக்கு கொஞ்சம் பயமாக்கிடக்கு.
(தற்பொழுது அவர்கள் குழுவாக படிக்கும் காலம். அடிக்கடி பரீட்சைகளும் இருக்கு. இது எல்லோருக்கும் தெரியும்)
 
எனக்கு தாயின் கவலையைப்புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனாலும் இதை தொடரவிடக்கூடாது. அது இருவருக்கும் நல்லதல்ல.

 
நான் : அவனுக்கு இப்ப எத்தனை வயசு?
மனைவி : 21 முடிஞ்சுது
நான் : அவன் இப்ப என்ன படிக்கின்றான்?
மனைவி : யூனியில் 4ம் வருடம்
 
நான் பிரான்சுக்கு தனிய  வரும்   போது எனக்கும் 21 வயசு தானப்பா.  நான் என்ன கெட்டுப்போய் விட்டேனா?  நானும் தெரியாத நாலு பேருடன் தங்கி உணவக வேலை அத்துடன் இரவு ஆட்டம் என இருந்த இடத்தில இருந்து தான்  இதுவரை வந்தனான்.  நல்லது எது கெட்டது எது?  எதை எடுத்துக்கொள்ளணும்  எதை தவிர்க்கணும்  எமது எதிர்கால குறிக்கோள் என்ன? என்று எனக்கிருந்த தெளிவு பிரான்சில் பிறந்து வளர்ந்து என்னைவிட அதிகம் படிக்கும் அவனுக்கு இருக்கும்.  இல்லையென்றால் இதற்கு மேல் அவனுக்கு நாம் ஊட்டவும் முடியாது. அவன் அந்த எல்லையைக்கடந்து வந்துவிட்டான் என்றேன்.
 
மனைவி : சிறிது நேரத்துக்குப்பின் உண்மைதான். நான் உங்களை வைத்து அவனை நினைக்கவில்லை. கண்டதையும் கற்பனை  செய்துவிட்டேன் என்றாள்.
 
இதை இப்படியே தான் என்னைக்கேட்டதையும் அதற்கு  நான் சொன்ன பதிலையும் மகனிடம் அடுத்த நாள் சொல்லியுள்ளார்.
அதற்கு மகன் சொன்ன பதில்.
அதுதுதுதுதுதுதுதுது  என் அப்பா.
 
சில வாரங்களின் பின்
மகன் : 530 பேர் கலந்து கொண்ட பரீட்சையில் எனது குழுதான் முதலாவது இடத்துக்கு தெரிவாகியுள்ளது அப்பா

 
காட்சி 2
 
எனது  உறவுக்காறக்குடும்ப இளைஞன் காதலித்தான்.  அதை இருபகுதியிலும் பேசி முடிக்கும்படி ஆண் வீட்டுக்காறர் என்னிடம் கேட்டார்கள்.  சிரி இது உண்மைதானா என விசாரிக்கணுமே என்று வீட்டில் தொடங்கினேன்.  எனது மக்களுக்கு இது பல மாதங்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது.  நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மனைவி  மகளுடன் சத்தம்  போட்டுள்ளார்.  மகள் சகோதரனிடம் சொல்லியுள்ளார்.
அவன் அதற்கு சொன்ன பதில்
பெற்றோர்கள் முதல் தலைமுறையைச்சேர்ந்தவர்கள்.  அவர்களுக்கு எமது தலைமுறையைப்புரிந்து கொள்வது கடினம்.  எம்மைப்பற்றி  நாம் எம் பெற்றோரிடம் சொல்லலாம். மற்றவர் பற்றி??? அதை இவர்கள் பெரிது படுத்திவிட்டால்...???
எனவே சிலவற்றை  சொல்லவேண்டியதில்லை.
இதை மனைவி என்னிடம் சொல்ல நான் சொன்னது
அப்படியே  இருக்கக்கடவது...........
எதற்கு தலைக்கு வேதனை???
 
காட்சி  3
 
ஒரு நாள் மகன் கேட்டான்.
அப்பா நண்பன் (வெள்ளை) ஒருவனின் பிறந்தநாள் இன்று இரவு 12 மணிக்கு.  அவன் மலேசியாவில் 3 மாதம் என்னுடன் ஒரே ரூமில் இருந்தான் கட்டாயம் போகணும். ஆனால் எனக்கு நாளைக்காலை பரீட்சை இருக்கு. அதனால் நான் நேரத்தோட வரணும்.
சரி போ.
நான் வந்து  ஏற்றிக்கொண்டு வருகின்றேன்.  விலாசத்தை குறுநகல் செய்  என்றேன்.
போவதற்காக காரில் விலாசத்தை அடித்தால் 100கிலோமீற்றர்.  அது கொஞ்சம் காட்டுப்பாதை.  துணைக்கு மகளையும் கூட்டிக்கொண்டு முல்லைத்தீவு கடடுப்பாதைக்குள்ளால் போனது  போல் போய்ச்சேர்ந்தாச்சு.
 
நல்ல குளிர்.  ஆனால் எல்லோரும் கையில் கிளாசுடன் வெளியில் நிற்கின்றனர். எனது காரைக்கண்டதும் தேவதை போல் வெள்ளை உடையணிந்த நல்ல அழகான பெண் என்னை  நோக்கி  வருகின்றார். கையில் கிளாசுடன்.  வணக்கம் நலமா என்கிறார்.  நானும் பதிலுக்கு வணக்கம் நலம்.  தாங்கள் நலமா?
 
அவருக்கு பின்னாலிருந்து இரண்டு கண்கள் மட்டும் தெரியும்படியாக  ஒருவர்  வணக்கம் சொல்கின்றார். அவர் மதுபோதையில் இருப்பது தெரிகிறது.  அப்படியே அவருக்குப்பின்னால் ஒழிந்தபடியே  நிற்கின்றார். (அவருக்குத்தான் பிறந்தநாள். ஒழித்திருப்பது அவரது பெண்நண்பி).  அப்படியே ஒழிந்தபடி பின் வாங்கி காருக்குப்பின்னால் வந்து எனது மகளுடன் பேசுகின்றார்.  அப்பொழுது அப்பாவிடம் சொல் குறைநினைக்கவேண்டாம் என்று என்று எனது காதில் விழுகிறது.
 
எனது மகன் வருகின்றார்.  அப்பா இன்னும் இருவர் வரணுமாம்.  காரில் இடமிருக்கா என்று கேட்கின்றார்.  ஓம் இருக்கு என்கின்றேன்.
 
ஒருவர்  வருகின்றார்.  வணக்கம் என கை குலுக்குகின்றார். குடித்திருப்பது தெரிகிறது.  ஆனால் அளவுடன்.
பின்னால் இன்னொருத்தர் வருகின்றார். வணக்கம் சொன்னபடி மற்றவருக்குப்பின்னால் ஒழிந்தபடி காருக்குள் ஏறிக்கொள்கின்றார்.  நான் காரை ஓட்டத்தொடங்குகின்றேன்.  கார் வேகம் எடுக்க அடிக்கடி கார்க்கண்ணாடி திறந்து பூட்டப்படுவது தெரிகிறது.  நல்ல குளிர் வேறு.   யாருக்கோ ஒத்துவரவில்லை என்பது புரிகிறது. அவர்களது யூனிக்கு முன் வந்ததும் இருவரும் இறங்கிக்கொள்கின்றனர்.  ஒருவர்  ஐந்து தடவைக்கு மேல் சொறி  சொல்கிறார்.
வீட்டுக்கு வந்ததும் காரைப்பார்க்கின்றேன். பின்பக்கம் முழுவதும் வாந்தி.
2 நாளைக்குப்பின் மகன் சொல்கின்றார்
அப்பா அவன் மன்னிப்புக்கேட்டு தொலைபேசி  அடித்தவன்.
நீங்கள் என்ன   சொன்னனீங்கள் என்று கேட்டவன்.  நான் ஒன்றும் சொல்வில்லை என்றவுடன் மீண்டும் மீண்டும் கேட்கின்றான்  என்றான்.
அதை அடுத்த நாளே நான் கழுவிவிட்டேன்.  ஆனால் அளவோடு இருக்கலாமல்லவா என்றேன்.
 
அது சரி
ஏன் இப்படி என்னைக்கண்டு மிரள்கின்றார்கள் என்றேன்.
எனது அப்பா
சிகரட் குடிப்பதில்லை
மது  பாவிப்பதில்லை என்று அவர்களுக்கு  நான் சொல்லியுள்ளேன் என்றான்
cleardot.gif
 
 
காட்சி  4
 
கொஞ்ச  நாளாக மனைவி  ஒரே கரைச்சல்.
அப்பா
பிள்ளையளும் வளர்ந்து விட்டது.  கொஞ்சம் குறிப்பை ஒருக்கா பார்ப்பம்.
சரி  இனியும் கடத்த ஏலாது.
ஓம் என்றது தான் தாமதம்
அடுத்த நாளே சாத்திரியிடம் நேரம் குறித்தாச்சு.
 
சாத்திரியிடம் போய் ஒவ்வொன்றாக பார்த்து.............
 
மகனின் குறிப்பை பார்த்துக்கொண்டிருந்த சாத்திரி ஒரு விடயத்தைக்குறிப்பிட்டதும் விழித்துக்கொண்டு மீண்டும் கேட்டேன் திருப்பிச்சொல்லுங்கோ...
இவர் ஒரு நல்ல பிள்ளை.
எல்லாம் உங்க விருப்பப்படியேதான் செய்வார். திருமணம் உட்பட.
கெட்ட பெயர் எடுக்கமாட்டார்.
சொல்லுக்கேட்பார்
மரியாதையாக பழகுவார் பேசுவார்.
 
அது சரி கடைசியாக ஒன்று சொன்னீர்களே அதைச்சொல்லுங்கோ.
இவர் சாரைப்பாம்பு போல்.
அந்த மாதிரி நல்ல மாதிரி இருப்பார். படுத்துக்கிடப்பார்.
பொழுது பட ஒருவருக்கும் தெரியாமல் வெளியில் போய் தனக்குத்தேவையானவற்றை சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளையாட்டம் வந்து படுத்துவிடுவார்.
 
நான் மனைவியைப்பார்க்கின்றேன்.
மனைவி  என்னைப்பார்க்கின்றார்.  இருவரையும் சாத்திரி  பார்க்கின்றார்.
 
காருக்குள் மனைவி.
என்னப்பா சாத்திரி குண்டைத்தூக்கிப்போடுகிறார்.
நான் : என்ன  குண்டு?
இதைத்தான் நானும் எனது இளவயசில் செய்தேன்.
போட்டது தானே வரும்.
தெரிஞ்சும் தின்னாதே
தெரியாமலும் தின்னாதே என்பது அநியாயமடி என்கின்றேன்.
என்ன நினைத்தாரோ தோளில் சாய்ந்து கொள்கின்றார்.....
முற்றும்
யாவும் உண்மை.
 
 
thanks: visuku

0 Kommentare:

Kommentar veröffentlichen