Mittwoch, 22. Mai 2013

அப்பாவின் மனசு!

http://api.ning.com/files/FzdPcnUb3XR5hYmKpTRqf5Hupu3EA9*LiXyzV9llAGbXA*RMERhUMMXrWK8pigS4NtLwI6CwyEh7D11--tjca-6EtOrPkggN/ElderlyManFromIndia.jpgமனைவியின் பதினாறாம் நாள் காரியங்கள் நடந்து முடிந்து, வந்த உறவுக்காரர்கள் கிளம்பிச் செல்ல, மனைவியின் படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கதிரேசன்.
அப்பாவைப் பார்க்க, யமுனாவுக்கு பாவமாக இருந்தது. அம்மா இல்லாமல், இனி அப்பா எப்படி தனியாக வாழப்போகிறார். தோட்டத்தில் அண்ணி நிற்பது தெரிய, அவளை நோக்கிச் சென்றாள்.
""அண்ணி, உங்ககிட்டே மனசுவிட்டு பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உறவுக்காரங்க புறப்பட்டுப் போனதால இப்பத்தான் தனிமை கிடைச்சிருக்கு.''
என்ன விஷயம் என்பது போல, அவளைப் பார்த்தாள் வித்யா.



""அம்மாவும், அப்பாவுமாக இருந்தவரைக்கும், அடுத்தவங்களுக்கு தொந்தரவு தராமல் இரண்டு பேருமாக இருந்துட்டாங்க. இனி, அப்பாவின் நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு அண்ணி. இனி, அவரை தனியா விட முடியாது. அண்ணன்கிட்ட, இது விஷயமா பேசினேன். "அப்பாவை என்னோடு கொண்டு போய் வச்சுக்க, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதில், உங்க அண்ணி சம்மதம் தான் முக்கியம். அவதான் கூடவே வச்சு கவனிக்கப் போறவ. அதனால, அவக்கிட்டே பேசு'ன்னு சொல்லிட்டாரு... நீங்க தான் அண்ணி, அப்பாவை, இனி உங்க பொறுப்பில் வச்சு பார்த்துக்கணும்.''
""இங்கே பாரு யமுனா. உன் ஆதங்கம் எனக்குப் புரியுது. எனக்கு மனசிலே ஒண்ணு வச்சுகிட்டு, வெளியே ஒண்ணு பேசத் தெரியாது. அப்பாவை அழைச்சிட்டுப் போய் வச்சிக்கிறது எனக்கு சரியா வரும்ன்னு தோணலை. நீ, ஏன் உங்கப்பாவை உன்னோடு கூட்டிட்டுப் போகக்கூடாது.''
""நீங்க சொல்றது சரிதான் அண்ணி. இருந்தாலும், இப்ப தான் என் மாமனாருக்கு ஆபரேஷன் நடந்தது, வீட்டில இருக்கிறாரு. மாமனாரும், மாமியாரும் அவங்க ஊருக்குப்போக ஆறு மாசம் ஆகும். அதுவரைக்கும், என்னால அப்பாவை அழைச்சிட்டு போக முடியாது. அதற்குப் பின், அப்பாவை என்கிட்டே வச்சுக்கிறேன். இரண்டு வீட்டிலுமாக மாத்தி, மாத்தி இருக்கட்டும். தயவு செய்து வயசான காலத்தில், அவரைத் தனியே விட வேண்டாம் அண்ணி.''
""உங்கப்பாவோட குணம் தெரிஞ்சு, அவரைக் கூட்டிட்டு போகச் சொல்றியே... அத்தை அவர்கிட்டே பட்டபாடு நமக்குத் தெரியாதா... பாவம் அந்த மனுஷியை...என்னமா ஆட்டி வச்சாரு. சாம்பாரில் துளி உப்பு கூடிப் போச்சுன்னா அவ்வளவு தான், "இந்த சாப்பாட்டை எவன் சாப்பிடுவான் தூக்கி குப்பையிலே கொட்டு'ன்னு சத்தம் போடுவாரு. கடைக்குப் போய்விட்டு வந்தவர்கிட்டே, ஒரு சாமான் மறந்து போய், திரும்ப வாங்கிட்டு வரச்சொன்னா," நீ வச்ச வேலைக்காரன்னு நினைச்சியா. ஒரு மனுஷனை, எத்தனை முறை அலைய விடுவேன்'னு கத்துவாரு. நேரத்துக்கு சாப்பாடு வைக்காட்டி கோபம். பூஜை ரூமிலே சுவாமி படத்துக்கு, பூப் போடாட்டி சத்தம் ... ஏ... அப்பா அத்தைய பாடாய் படுத்திவச்சாரே.
""நல்ல வேளை உங்க அண்ணன், உங்கப்பா மாதிரி இல்லை, நல்ல குணமாக இருக்கிறதாலே, எங்க குழந்தைகளோடு, இந்த பத்து வருஷமா நிம்மதியா குடித்தனம் நடத்திட்டு இருக்கேன். இவரை நான் கூட்டிட்டுப் போய் வச்சுட்டு, நிம்மதியா இருக்கிற எங்க குடும்பத்திலே பிரச்னையை உண்டாக்கவா... வேண்டாம் யமுனா, இது சரிப்பட்டு வராது.''
""தயவு செய்து அண்ணி, இப்படி ஒரேயடியாக மறுத்தீங்கன்னா எப்படி. அண்ணனுக்கும், உங்களுக்கும் அப்பாவை பராமரிக்கிற பொறுப்பு இருக்கு. தயவு செய்து தட்டிக்கழிக்காதீங்க. ஆறு மாசம் கழிச்சு, நானே வந்து கூட்டிட்டுப் போறேன். புரிஞ்சுக்குங்க அண்ணி.''
ஒரு நிமிஷம் மவுனமாக இருந்தவள், "" சரி யமுனா. நீ இவ்வளவு தூரம் சொல்றியேன்னு கூட்டிட்டுப் போறேன். ஆனா... தேவையில்லாம பிரச்னை ஏதும் செய்தார்ன்னா, அத்தை மாதிரி நான் வாயை மூடிட்டு இருக்கமாட்டேன் புரியுதா... அப்பறம், நீ வந்து ஏதும் சொல்லக்கூடாது.''
""அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. நீங்க தைரியமாக அப்பாவை அழைச்சிட்டு போங்க. எனக்கு, இப்பதான் மனசுக்கு நிம்மதியாக இருக்கு.''
காலை மணி ஏழாக, வாசலையே பார்த்துக் கொண்டிருந்த மருமகளிடம் வந்தார் கதிரேசன்.
""என்னம்மா பார்த்துட்டு இருக்கே.''
""பால்காரன் மாமா. ஒரு நாளை போல ஒரு நாள் லேட்டாகவே வர்றான். காபி கலக்கணும். பால் இல்லை. அதான் பார்த்துட்டு இருக்கேன்.''
""பால் தானே, இனி பால்காரனை போடச் சொல்ல வேண்டாம். நான் தான் அஞ்சு மணிக்கே எழுந்திருக்கிறேனே... வாக்கிங் போற மாதிரி போய், பால் பூத்தில் நாளையிலிருந்து, நானே வாங்கிட்டு வரேன்மா.''
குழந்தைகளை ஸ்கூலில் விடுவதற்கு வித்யா கிளம்ப, ""வித்யா... இனி நீ போக வேண்டாம். நானே காலையில ஸ்கூலில் கொண்டு போய் விட்டுட்டு, சாயந்திரம் திரும்ப அழைச்சிட்டு வந்துடறேன். வீட்டிலே சும்மா உட்கார்ந்திருக்கிறதுக்கு, என்பேரன் பேத்தியோடு பேசிக்கிட்டேபோய் வருவேன்.''
அவராகவே முன் வந்து வித்யாவுக்கு உதவ ஆரம்பித்தார்.
தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவது, சாயந்திரம் பிள்ளைகளை பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு விளையாட அழைத்துச் செல்வது என, வித்யாவின் அன்றாட வேலைகளை சுலபமாக்கினார்.
சாதத்தில் சாம்பாரை ஊற்றி பிசைந்து, ஒரு வாய் வைத்தவள், உப்பு கரிக்க, "அடடா... கை மறதியா உப்பை அதிகம் போட்டுட்டேன் போலிருக்கு...' மாமா ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டுச் சென்றது ஞாபகம் வர, ""மாமா சாம்பாரில் உப்பு அதிகமா போட்டுட்டேன் போலிருக்கு, சாப்பிட்ட நீங்க ஒண்ணும் சொல்லலையே.''
""அதுவாம்மா. நல்லாதான் சமைக்கிறே. என்னவோ சமயத்தில், இப்படி திருஷ்டி பட்டாற்போல் நடந்துடுது. அதுக்கு என்ன செய்ய முடியும். நல்லா செய்த போது ருசித்து சாப்பிட்ட நாக்கு, இதையும் ஏத்துக்க வேண்டியது தான்.''
புன்னகையுடன் பதில் சொன்ன மாமனாரை, ஆச்சரியமாகப் பார்த்தாள். எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர் எப்படி, இப்படி மாறிப் போனார். அன்பாக, அனுசரணையாக இருக்கும் மாமனாரை, அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
ஊரிலிருந்து வந்திருந்தாள் யமுனா. ""அண்ணி ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பா மலர்ந்த முகத்தோடு இருக்காரு. நீங்க, நல்லபடியா கவனிச்சுக்கிறீங்கன்னு நினைக்கிறேன். என் மாமனார், மாமியார் ஊருக்குப் போயிட்டாங்க. அப்பாவை நான் அழைச்சிட்டுப் போயி, ஒரு ஆறு மாசம் என் வீட்டில் வச்சிருக்கிறேன் அண்ணி. அப்பாவை, அழைச்சிட்டுப் போகத்தான் வந்தேன்.''
""என்ன... மாமாவை அனுப்பறதா... சான்ஸே இல்லை. உனக்கு, அப்பாவோடு இருக்கணும்ன்னு ஆசையா இருந்தா...கூட ஒரு வாரம் தங்கிட்டு போ. மாமாவை, நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன். அவரில்லாமல், என்னால் இருக்க முடியாது. என்கிட்டே எவ்வளவு அன்பும், பிரியமுமாக இருக்காரு தெரியுமா... நான் விட்டாலும், அவரோட பேரன், பேத்தி விட மாட்டாங்க.''
""அம்மா வித்யா,'' என்று கதிரேசன் குரல் கேட்டு, ""இதோ வந்திட்டேன் மாமா,'' என்று அண்ணி, அப்பாவை நோக்கி செல்வதை ஆச்சரியமாக பார்த்தாள்.
இந்த ஆறு மாசத்தில், இவர்களிடம் எப்படி இவ்வளவு அன்னியோன்யம் ஏற்பட்டது. அப்பாவின் கோப குணத்துக்கு, எப்படி அவரால் அண்ணியிடம் இவ்வளவு நல்ல பெயர் வாங்க முடிந்தது. கூட்டிட்டு போக மாட்டேன் என்று சொன்னவள், இப்போது அனுப்ப மறுக்கிறாளே... யமுனாவுக்கு புரியவில்லை.
""யமுனா, நீ மாமாகிட்டே பேசிட்டு இரு. பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்திருக்கு. தொட்டிலில் போடறாங்களாம்... கூப்பிட்டாங்க. நான் போய் பாத்துட்டு, பத்து நிமிஷத்துல வந்துர்றேன்.''
வித்யா புறப்பட்டு செல்ல, அப்பாவுடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்க, அவரருகில் வந்தாள் யமுனா.
""அப்பா.''
""சொல்லும்மா... நீ என்னைப் பார்க்க வந்தது சந்தோஷம்மா.''
""அப்பா, நீங்க எப்படிப்பா இருக்கீங்க. அண்ணி, உங்களை நல்லபடியா பார்த்துக்கிறாங்களா?''
""என்னம்மா இப்படி கேட்டுட்டே. அவ, எனக்கு இன்னொரு மகள்மா.''
""அப்பா... கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க நிறைய மாறிப் போயிட்டதாக எனக்கு தோணுது. அம்மாவோடு இருக்கும் போது, உங்ககிட்டே நான் பார்த்த கோபம், அதிகாரம் எதுவுமே, இப்ப உங்ககிட்டே இருக்கிறதாகத் தெரியலை. ஏன்ப்பா...உங்களை மாத்திக்கிட்டீங்களா?''
புன்னகையோடு மகளைப் பார்த்தார். ""அம்மாவோடு, நான் வாழ்ந்த வாழ்க்கை, எங்களோட முப்பத்தைந்து வருட தாம்பத்தியத்தின் வெளிப்பாடு. ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டு, அவங்கவங்க குணநலத்தோடு ஏத்துக்கிட்டோம். என் கோபக்குரல், அவளுக்கு அத்துப்படி. இதுக்கெல்லாம் சளைக்க மாட்டா. நான் கோபப்படறது மட்டும் தான் <உங்களுக்குத் தெரியும். உள்ளூர எங்களுக்குள் இழையோடும் அன்பும், பாசமும் உங்களுக்குத் தெரியாது. சாப்பாட்டில் உப்பு கூடி இருந்தா, கோபப்பட்டேனே... அது அவளுகாக. அவளுக்கு ப்ரஷர் இருக்கு, உப்பு ஆகாது. அவளும், அந்த சாப்பாட்டை சாப்பிடணுங்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடு. நான் அவக்கிட்டே ஆத்திரப்பட்டது, கத்தறது எல்லாமே உரிமையின் குரல். கசப்பு மருந்தை பிள்ளைக்கு கொடுக்கிறதாலே அம்மாவுக்கு, பிள்ளைக்கிட்ட பாசம் இல்லைன்னு சொல்லமுடியுமா? இதுவும், ஒரு வகை அன்பின் வெளிப்பாடு தான். எங்க தாம்பத்தியம் முடிவுக்கு வந்துடுச்சு.
"" இப்ப நான் வாழறது, என் மகனோட குடும்பத்தில். அந்தக் குடும்பத்தில் என்னால, எந்தப் பிரச்னையும் வரக் கூடாது. இங்கே என் கோபத்துக்கும், ஆத்திரத்துக்கும் வேலை இல்லை. இது, என் அன்பை மட்டுமே காட்ட வேண்டிய இடம். இப்ப என் கண்ணோட்டம் மாறிடுச்சும்மா. என் கடைசி கால வாழ்க்கையை, என் பிள்ளையோடு வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இதில், என் ஞாபகங்களாக, அன்பு மட்டும் தான் இருக்கணும். அப்பா, நம்மோடு இருந்த நாட்கள், நம் மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுத்ததுன்னு, அவங்க நினைக்கிற மாதிரி வாழ்ந்துட்டு போகணும்மா.
""என் மருமகளுக்கு, ஒரு நல்ல தகப்பனாக இருக்கேன். அவளும், என்னை ஒரு தந்தை ஸ்தானத்தில் வச்சு, அன்போடு பராமரிக்கிறா. நான் நிறைவோடு வாழ்ந்திட்டிருக்கேன்,'' என்று அப்பா சொல்ல, அவரை நினைத்து பெருமிதப்பட்டவளாக, அன்போடு அவரைப் பார்த்தாள் யமுனா.
***

சக்தி பாலாஜி

0 Kommentare:

Kommentar veröffentlichen